பயம்
ஜி வேதாந்தம்.
I
மூன்று மணிக்கு வெளியே கடைக்கு வந்த எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. மக்கள் கூட்டமாக அந்த பத்திரிக்கை கடை முன் நின்றிருந்தனர். என்ன விஷயம் என்று பார்க்கப் போனபோது, எதிரில் ஒருவர் பிரபல ஆங்கில செய்தித்தாளின் விசேஷ மாலை பதிப்பை வைத்து கொண்டிருந்தார். அதில் நாட்டின் பல தலைவர்கள் கைது என்றும், எமெர்ஜென்சி என்றும் கொட்டை எழுத்தில் போடப்பட்டிருந்தது. கூட்டத்தில் எல்லோரும், திகிலுடன், மெதுவான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு வேலைக்குப்போக நேரமாகி விட்டதால் அவசரமாக வீட்டிற்கு திரும்பினேன்.
வீட்டில் டிபனை சாப்பிட்டபடியே, நான் படித்த விஷயத்தை சொல்லி விட்டு ஆபிஸ் செல்ல ஆயத்தமானேன் "இனி மேல் என்னடா ஆகும்" என்று அம்மா கேட்டதற்கு, "எல்லாம் போகப்போக தெரியும்" என்று சொல்லி விட்டு வெளியே வந்தேன். இதற்குள் மாலை பத்திரிக்கைகளும்வந்திருந்தன . பீச் ஸ்டேஷனில் வெளியே போக வழி இல்லாமல் மக்கள் கூட்டம். இதிலே போலீஸ் படை வேறு. ஸ்டேஷனை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரிடமும் நிறுத்தி டிக்கெட் கேட்ட வண்ணம் இருந்தனர். கலக்கமான மனநிலையுடன் ஆபிஸ் எந்த லக்ஷணத்தில் இருக்கிறதோ என்று எண்ணியவாறு ஆபீஸ் வந்தேன். வழக்கமாக என்னை யாரும் தடுத்து "CARD"ஐ கேட்டதில்லை. ஆனால் இன்று கேட்டில் முரட்டுத்தனமான தோற்றத்துடன் விளங்கிய இரண்டு 'BSF' ஆட்கள், "CARD"ஐ கேட்டதுமில்லாமல், அதில் இருந்த போட்டோவுடன் என் முகத்தை ஒப்பிட்டு, பிறகே என்னை உள்ளே அனுமதித்தனர்.
2
மூன்று வருடங்களாக எங்கள் ஆபீஸின் மூன்று கிளைகளிலும், "விதிப்படி வேலை போராட்டம்" ஒரு சவாலுடன் நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால், பம்பாயிலும் கல்கத்தாவிலும் ஏழு யூனியன் அங்கத்தினர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அதன் விளைவாக பம்பாய், டெல்லி, கல்கத்தா ஆபீஸ்களில் பரிபூர்ண வேலை நிறுத்தம், இவற்றினால் பொது மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, பம்பாய் மேலிடம், எல்லா வெளிநாட்டுத் தந்திகளையும் சென்னை அலுவலகம் வழியாக மேல் நாடுகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. அதனால் சின்னஞ்சிறிய எங்கள் ஆபீஸில் ஒரே குழப்பம். பாதிக்கப்பட்ட மற்ற சென்டரிலுள்ள தோழர்களுக்காக உள்ளூர் யூனியன் "விதிப்படி வேலை" செய்ய வேண்டியபோது அதற்கு நல்ல பலன் இல்லை. எங்கள் ஆபீஸ் எப்பொழுதுமே இந்த மாதிரியான வேலைநிறுத்தம் முதலியவற்றில் மிக மெத்தனம். பிறகு பாதி பேருக்கு, ஆபீஸர் கூப்பிட்டனுப்பிப் பேசினாலே, பதில் பேச முடியாத அளவிற்கு பயம். ஆகையால் எங்களுக்கு மற்ற சென்டர்களில் நல்ல பெயர் இல்லை. இந்த நிலையில் தான் இந்த புதிய கட்டுபாடுகள் வந்தன.
3
STAFF NOTICE
Until further advice no telegrams should be transmitted to foreign circuits and telegrams received from foreign countries should not be released to the C.T.O.
4
எல்லோரும் கும்பலாக நின்று கொண்டிருந்தோம். ஆபீஸர்கள் மூன்று பேரும் ஒரு மூலையில் நின்று கொண்டு CENSOR ஆபீஸர்களின் வரவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர். லண்டன் பிரிண்டரில் இருந்த எனக்கு பொழுது போகவில்லை. இவ்வாறு இரண்டு மணி நேரம் கழிந்தது. P.I.B.யில் இருந்து CENSOR ஆபீஸர்கள் வந்து விட்டனர். அவர்கள் உட்கார்து ஒவ்வொரு தந்தியையும் பிரித்துப் பார்த்து, அதை ரிலீஸ் செய்து கொண்டிருந்தனர்.
5
STAFF NOTICE
All out going/incoming telegrams to/from foreign countries hould be dealt with only after the approval and signature of the censors.
6
All the supervisors are informed not to deploy staff on overtime until further orders.
7
இரவு 11 மணிக்கு முன்னால் யாரும் வீட்டிற்குப் போகக் கூடாது என்று DTM சொன்னபோது, குரோம்பேட்டை, தாம்பரம், மற்றும் செங்கல்பட்டிலிருந்து வரும் நான்கு பேர், "எங்களை மட்டும் 10:30 மணிக்குப் போக அனுமதியுங்கள்" என்று கேட்டனர். அதற்கு DTM "Go and sit in your points. I don't want any arguments here" என்று கத்தினார்.
நானும் ஆபீஸ் நண்பர் ஒருவரும், 11:15 வண்டியில் உட்கார்ந்திருந்தோம். "வீட்டுக்கு போய் BBC இல்லேன்னா VOA கேட்டால் தான் விஷயம் என்ன என்று தெரியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர், "இனிமே இந்த மாதிரியெல்லாம் ரயில்லே சத்தம் போட்டு பேசாதே. எந்த புத்துலே, எந்த பாம்பு இருக்குமோ, நீயும் ஆத்துக்கு ஒரே பிள்ளை. உனக்கென்ன வந்தது. உன் வேலையை பார்த்திண்டு போ" என்றார். வீட்டில் 11:30 மணிக்கு BBC கேட்டேன். இந்திய பத்திரிக்கைகளில் வெளி வந்த செய்திதான் BBCயிலும் சொன்னார்கள்.
8
OUTWARD CIRCULATION TO NOTE
Any telegram addressed to ..... or any other addresses in USA, signed by collect card no... should be handed over to DTM on duty immediately.
II
பாலு வந்திருந்தான் என்று அம்மா சொன்னாள். நான் சட்டையைக் கழற்றியபடியே, "என்ன விஷயமாம்?" என்றேன். "நீ இல்லையான்னு கேட்டான், அப்புறம் வரேன்னுட்டு போனான்" என்றாள். பாலு வந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நான் அவனைப் பார்த்து நான்கு வருடங்களுக்கு மேல் ஆகிறது. நான் அசோக் நகரில் குடியிருந்தபோது, பாலுவின் அண்ணா எனக்கு பக்கத்துக்கு போர்ஷனில் இருந்தார், பிரச்சனைகள் அதிகம் இல்லாத, சுமாரான வசதியுள்ள அந்த குடும்பத்தின் ஒரே ஒரு பிரச்சனை பாலுதான்.
டிப்ளோமா வாங்கியவுடன், வேலை எதுவும் தேடாமல் அவன் கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்து விட்டான். அவன் அம்மா தனக்கு இருந்த வருத்தத்தை மூடி வைத்திருந்தே ஒரு வித வியாதியுமில்லாமல் இறந்துவிட்டாள். அப்போது கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்தவன், நான் வேலைக்கு போக மாட்டேன் என்று சொல்லி விட்டான். தினமும் காலையில் வெள்ளை சட்டை , காக்கி அரை டிராயர் போட்டுக் கொண்டு வெளியே போவான். அதற்கு பிறகு இரவு ஏழு மணிக்குத்தான் வருவான்.
எப்போதாவது, நான் அவனை பார்க்க நேர்ந்தால் "வணக்கம்" என்று சொல்லுவான். சாதரணமாக எல்லோரும் சொல்வதுபோல், "Good morning" அல்லது "ஹலோ" என்று சொல்லாமல், அவன் நாடக பாணியில் வணக்கம் சொல்வது எனக்கு சிரிப்பைத் தரும். சில நாட்களில் அவன், "என்ன ஐயா, சாயந்தரம் சங்கத்துக்கு வாங்களேன்" என்று கூப்பிடுவான். நானும் மரியாதையுடன் மறுத்து விடுவேன். (எனக்கு இதெல்லாம் அலர்ஜி)
இவ்வளவு குறைந்த அளவு பழக்கம் உள்ள அவன், நான்கு வருடங்களுக்குப் பிறகு என்னை தேடி வந்தது எனக்கு ஆச்சர்யம். பிறகு தான் காலையில் படித்த செய்தி கவனத்திற்கு வந்தது. பாலு சார்ந்திருந்த சங்கத்தை, தேச விரோதமானது என்று அறிவித்து, அதன் தலைவர் மற்றும் மாநில செயலாளர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாலு பிறகு வருகிறேன் என்று சொன்னது எனக்கு பயத்தை அளிக்க ஆரம்பித்தது. அவன் இங்கு வருவது போலீசுக்கு தெரிந்து, அதன் மூலம் என்னுடைய வேலைக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என்ற கவலை என் மனதை அரிக்க ஆரம்பித்தது. அவன் வராமலே இருக்க மாட்டனா என்று வேண்ட ஆரம்பித்தேன்.
ஆனால் அவன் மறுநாள் காலை வந்தான். என்னைப் பார்த்து அவன் சிரித்துக்கொண்டே, 'பயப்பட வேண்டாம்' என்று தான் பேச்சை ஆரம்பித்தான். எனக்கு கொஞ்சம் வெட்கமாகிவிட்டது. 'எப்படி எனக்கு பயம்னு தெரிஞ்சிண்டே' என்று கேட்டேன். "நீயோ Government servant. நானோ, தடை செய்யப்பட்ட சங்கத்தின் ஊழியன். So, நீ பயப்படறதிலே ஞாயம் இருக்கு. ஆனா இப்ப இங்கே இருக்கிற மாநில சர்க்கார், அவ்வளவு ஸ்ட்ரிக்டா, எங்களை தேடி கைது பண்றதில்லே. அதெல்லாம் மற்ற ஸ்டேட்ல தான்" என்று சொல்லிவிட்டு, "நீ தான் அரசியல் அது இதுன்னு பேசுவியே. இப்ப நாட்டுலே நடக்கறதைப் பத்தி என்ன நினைக்கிறே" என்றான். நான் "ஒண்ணும் நினைக்கல்லே. ஒரே குழப்பமா, பயமா இருக்கு" என்று சொன்னதற்கு அவன், "எதற்கு கவலைப்படறே. God is there to save us. முடிந்தால் பிறகு உன்னைப் பார்க்கிறேன்," என்று சொல்லி விட்டு விடை பெற்றான்.
நாடு உனக்கு என்ன நன்மை செய்தது என்று நினைக்காதே. நீ நாட்டிற்கு என்ன நன்மை செய்தாய் என்று நினை, என்ற அறிஞர் கென்னடியின் வாக்குபடி, நாம் எல்லோரும், நாட்டிற்காக உழைத்து பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று "மேத்தாபுரம் பக்கிரிசாமி" எழுதியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பாடல்:
நான் ஏன் பிறந்தேன் !
ஆனால் அவன் மறுநாள் காலை வந்தான். என்னைப் பார்த்து அவன் சிரித்துக்கொண்டே, 'பயப்பட வேண்டாம்' என்று தான் பேச்சை ஆரம்பித்தான். எனக்கு கொஞ்சம் வெட்கமாகிவிட்டது. 'எப்படி எனக்கு பயம்னு தெரிஞ்சிண்டே' என்று கேட்டேன். "நீயோ Government servant. நானோ, தடை செய்யப்பட்ட சங்கத்தின் ஊழியன். So, நீ பயப்படறதிலே ஞாயம் இருக்கு. ஆனா இப்ப இங்கே இருக்கிற மாநில சர்க்கார், அவ்வளவு ஸ்ட்ரிக்டா, எங்களை தேடி கைது பண்றதில்லே. அதெல்லாம் மற்ற ஸ்டேட்ல தான்" என்று சொல்லிவிட்டு, "நீ தான் அரசியல் அது இதுன்னு பேசுவியே. இப்ப நாட்டுலே நடக்கறதைப் பத்தி என்ன நினைக்கிறே" என்றான். நான் "ஒண்ணும் நினைக்கல்லே. ஒரே குழப்பமா, பயமா இருக்கு" என்று சொன்னதற்கு அவன், "எதற்கு கவலைப்படறே. God is there to save us. முடிந்தால் பிறகு உன்னைப் பார்க்கிறேன்," என்று சொல்லி விட்டு விடை பெற்றான்.
III
நாடு உனக்கு என்ன நன்மை செய்தது என்று நினைக்காதே. நீ நாட்டிற்கு என்ன நன்மை செய்தாய் என்று நினை, என்ற அறிஞர் கென்னடியின் வாக்குபடி, நாம் எல்லோரும், நாட்டிற்காக உழைத்து பிரதமரின் கரத்தை வலுப்படுத்துவோம் என்று "மேத்தாபுரம் பக்கிரிசாமி" எழுதியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்த பாடல்:
நான் ஏன் பிறந்தேன் !
IV
மாம்பலம் ஸ்டேஷனில்ஒரே கூட்டம். போலீஸ் படை ஒன்று நின்று கொண்டு, பீச்சிலிருந்தும், தாம்பரத்திலிருந்தும் வந்து இறங்கிய கும்பலை, ஒரே வழியில் வெளியே செல்லுமாறு ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தது . வெளியில் வர பாத்து நிமிடம் ஆயிற்று.
V
அந்தப் பேப்பர்க் கடைக்காரன், தன் பெண்ணின் குற்றச் சாட்டைக் கேட்டு, மனத் திருந்தி தான் பதுக்கி வைத்திருந்த பள்ளிக்கூட நோட்டுக்களை ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்தான்.
"வெள்ளி" இதழில் பிரபல எழுத்தாளர் எழுதிய "திட்டக்கதைகள்"
VI
இவ்வளவு நாட்களாக ஒரு சில எரிச்சல் தரும் சின்னச்சின்ன விஷயங்களைத் தவிர, பேச்சுரிமை மற்றும் படிப்புரிமை அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. நேற்று இங்குள்ள ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் எல்லாவற்றிலும்ஒரு கடுமை தெரிய ஆரம்பித்தது. பாலு என்ன ஆனானோ என்ற கவலையும் அதிகரிக்க ஆரம்பித்தது. இரண்டு நாள் கழித்து ஒருவன், தாடி மீசையுடன், அழுக்கு மூட்டையாக கடவை தட்டியபோது, நான் திறந்து "யார்" என்று கேட்டேன்:
"என்ன சம்பத்? என்னை அடையாளம் தெரியவில்லையா?" என்று அவன் கேட்டதும் தான், பாலு இவ்வாறு மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என்று தெரிந்தது. அவனை பின்பக்கம் தோட்டத்திற்கு அழைத்து சென்றேன். "இவ்வளவு நாள் எங்கிருந்தே? இப்ப போய் இங்கே வந்திருக்கே. நிலைமை ரொம்ப கடுமையாய்ப் போச்சு தெரியுமோ" என்று கேட்டேன்
"கூடுர் பக்கத்தில், காட்டிலே, ஆந்திர மாநில சங்க மெம்பர்கள் அண்டர் கிரௌண்டில் இருந்தா. அவாளுக்கு சப்ளை எடுத்துண்டு போய் கொடுத்திட்டு அங்கேயே தங்கிட்டேன். வெளியே வந்தப்பறம் தான் இங்கே ஆட்சி கவிழ்ந்தது எல்லாம் தெரியும். திரும்பவும் கூடுர் போலான்னு பாத்தேன். முடியல்லே. அதனாலே இங்கே வந்தேன்."
"என்ன சம்பத்? என்னை அடையாளம் தெரியவில்லையா?" என்று அவன் கேட்டதும் தான், பாலு இவ்வாறு மாறுவேடத்தில் வந்திருக்கிறான் என்று தெரிந்தது. அவனை பின்பக்கம் தோட்டத்திற்கு அழைத்து சென்றேன். "இவ்வளவு நாள் எங்கிருந்தே? இப்ப போய் இங்கே வந்திருக்கே. நிலைமை ரொம்ப கடுமையாய்ப் போச்சு தெரியுமோ" என்று கேட்டேன்
"கூடுர் பக்கத்தில், காட்டிலே, ஆந்திர மாநில சங்க மெம்பர்கள் அண்டர் கிரௌண்டில் இருந்தா. அவாளுக்கு சப்ளை எடுத்துண்டு போய் கொடுத்திட்டு அங்கேயே தங்கிட்டேன். வெளியே வந்தப்பறம் தான் இங்கே ஆட்சி கவிழ்ந்தது எல்லாம் தெரியும். திரும்பவும் கூடுர் போலான்னு பாத்தேன். முடியல்லே. அதனாலே இங்கே வந்தேன்."
"சரி போய் தலை தாடி மீசையெல்லாம் ஒழுங்கு பண்ணிக்கோ. இப்ப தாடியோட இருந்தாலே மத்தவா எல்லாம் சந்தேகப்படுவா. நீ போயிட்டு வந்து சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்துக்கோ" என்று சொல்லி விட்டு, நான் ஆபீஸ் சென்றேன்.
மாலை வந்து பார்த்த பொது, அவன் போலீஸால் தேடப்படும் குற்றவாளியாக என் பார்வையில் படவில்லை. நல்ல ஒரு பக்திமானாகக் காட்சி தந்தான்.
"ஏன் இப்படியெல்லாம் கவெர்மெண்டை சப்போர்ட் பண்றா இவாள்லாம்" என்று அவன் என்னை விவாதத்திற்கு அழைத்தான்.
"யார் மேலேயும் தப்பில்லே, பிரசார வேகம் என்னப் போல இருக்கவரங்களையும் மாத்திடும் போல இருக்கு. பஸ்ஸிலே, ஆபிஸ்ல, ரயில்லெ, ரேடியோவில எங்க பார்த்தாலும் ஜனங்களை brain-wash செய்யற எழுத்துக்கள். I/B ministryல, பக்கா, mass-psychology தெரிஞ்ச ஆசாமிகள் ஒக்காந்திண்டு எப்படி பிரசாரம் பண்ணினா, ஜனங்கள் நம்புவான்னு யோசனை பண்ணி காரியம் செய்யறா, அதற்கு பலன் இல்லாம போயிடுமா" என்றேன்.
"அது சரி, தமிழ் பத்திரிக்கைகள் ஏன் இப்படி மாஞ்சு மாஞ்சு வால் பிடிக்கறா" என்றான்.
"எல்லாம் வியாபாரம் தான். 80 பக்கத்திலே, பக்தி, காதல், ஹாஸ்யம், மர்மம் எல்லாம் கொடுத்து வியாபாரத்தை உசத்தினாப் போதும் நினைக்கிறவா, இப்ப இந்த அம்சத் திட்டம் வைத்து கதை எழுதினா இன்னும் பத்தாயிரம் காப்பி விக்கும்னா அதையும் செய்வா"
"இன்னொரு பத்திரிக்கைக்கு பேப்பர் கோட்டா ஈசியா கிடக்குது. அவாளுக்கு அது போதும். தர்மமாவது நியாயமாவது" என்று சொல்லிக்கொண்டே தூங்கச் சென்றோம்.
VII
நாட்டின் வளம் அதிகரிக்க அதிகமாக மரம் நடுங்கள்.
- நாட்டின் மிகச் சிறந்த இளைஞர் பேச்சு.
VIII
மாலை வீடு திரும்பியவுடன் பாலுவை காணாமல் "எங்கேம்மா அவன்" என்று கேட்டேன். "அவன் கார்த்தாலே எங்கேயோ போனான். அப்பறம் வாசல்ல ஒரே கூட்டமா இருந்தது. என்னன்னு போய்ப் பார்த்தா, பாலுவை போலீஸ் கையிலே விலங்கு போட்டு லாரியிலே ஏத்திண்டு போறதைப் பாத்தேன்" என்று அம்மா சொன்னாள்.
இப்போது தான் என் பயம் உச்சக் கட்டத்தை அடைத்தது. போலீஸ் அவனை சித்ரவதை செய்து, துன்புறுத்தி அவனுக்கு அடைக்கலம் கொடுத்தது யார் என்று கேட்டால், அவன் என்னை காட்டி கொடுத்தால் என் நிலை என்ன. நான் பேசத்தான் லாயக்கு. எந்த ஓர் சிறு கஷ்டத்தையும் தாங்க சக்தி இல்லாதவன். இங்கு அவன் தங்கி இருந்ததை நிச்சயம் போலீஸ் தெரிந்து கொள்ளும். பிறகு எனக்கு சோதனைக் காலம் தான் என்று குழம்பினேன்.
ஆனால் பாத்து நாட்கள் வரை,போலீஸ் என்னை தேடி வரவில்லை. எனக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது.
XI
பிறகு நடந்தது எல்லாம் ஏதோ கனவில் நடப்பது போல் நடந்தது. விடிவே இல்லை என்று எதையும் தாங்கிக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்த எனக்கு, அந்த தேர்தல் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தது. பாலு சுமார் ஒரு மாதத்திற்குப் பின் வெளியே வந்தான். அவன் உடல் தேற சுமார் இரண்டு மாதம் ஆயிற்று. ஆனால் அவனது தூக்கம் தான் பறி போய்விட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அவனால் சுய நினைவின்றி தூங்க முடிவதில்லை. தூக்கத்தின் நடுவில் எழுந்து, ரத்தத்தை உறைய வைக்குமாறு அலறுவான்.
கணையாழி ஜனவரி 1978.
மறு வெளியீடு கணையாழி களஞ்சியம் (பாகம் நான்கு)
தொகுப்பு - இந்திரா பார்த்தசாரதி
கலைஞன் பதிப்பகம். சென்னை